search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரவாயல் பொதுமக்கள் புகார்"

    மோசமான சாலையால் அவதி அடைந்த மதுரவாயல் பொதுமக்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வானகரம் முதல் வாலாஜா வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது.

    இதை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தனியார் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப் பில் உள்ளது.

    சாலை விரிவாக்கத்தை காரணம் காட்டி இந்த சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன.

    இதன் காரணமாக இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பு களும் ஏற்படுகின்றன. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அந்த பகுதி மக்கள் அடிக்கடி புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் சாலையை சீரமைக்க முயற்சி எடுத்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் சாலை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

    அத்துடன் சாலையை சீரமைக்க முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகளும் பொதுமக்களை சமரசம் செய்தனர். வானகரம், வேலப்பன் சாவடி உள்ளிட்ட சந்திப்புகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பொய் வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் தமிழ் நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் வரதராஜன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    வானகரம் முதல் வாலாஜா வரை உள்ள 93 கிலோ மீட்டர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் ஒரு நாள் ரூ.60 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் வானகரம் சந்திப்பு, வேலப்பன்சாவடி சந்திப்பு, பூந்தமல்லி, பாரி வாக்கம் சந்திப்பு உள்ளிட்ட மூன்று சந்திப்புகளில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து மோசமாக உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்  24-ந்தேதி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மதுரவாயல் குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாங்களே ஜல்லி மணல் கொட்டி சாலையை சீரமைக்க முயன்ற போது எங்கள் மீது திருவேற்காடு போலீசார் கிரிமினல் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

    அப்போது ரூ.10 லட்சம் செலவில் மூன்று சந்திப்பு களிலும் உள்ள சாலையை மூன்று மாதங்களில் சீரமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாராயணா மற்றும் அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்று வரை சாலையை சீரமைக்க வில்லை. 

    இதேபோல் 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானகரம் காஞ்சீபுரம் சாலை 730 கோடி ரூபாய்க்கும் காஞ்சீபுரம் முதல் ராணிப்பேட்டை சாலை 780கோடி ரூபாய்க்கும் விரிவாக்கம் செய்ய ஓப்பந்தம் போடப்பட்டு இதுவரை எந்தவித பணிகளும் நடைபெற வில்லை.

    இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தினந்தோறும்  அதிகரித்து வருகிறது. எனவே வாக்குறுதி தவறி தங்களது கடமையை செய்ய தவறிய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய லாரி உரிமையாளர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் ஏற்கனவே திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி போலீசிலும் இதேபோல்  புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    ×